ஆந்திர மக்களுக்கு திருப்ப தியே உன்னத தலம். மிகப்பெருமை வாய்ந்த பணக்காரக் கோவில்.
அனுதினமும் எண்ணி லாத பக்தர்கள் தரிசிக்கிறார்கள்.
தமிழ்நாட்டு வைணவர்களுக்கு ஸ்ரீரங்கமே பூலோக வைகுண்டம். வைகுண்ட ஏகாதசியன்றும், பங்குனி உத்திர சேர்த்தி உற்சவத்திற்கும் வரும் பக்தர்கள் கணக்கில் அடங்கா.
இரண்டு தலங்களும் ஆழ்வார் களால் பாடப்பட்டுள்ளதால் திவ்யதேசம் என்பர். மொத்தம் 3,776 பாசுரங்கள் 108 திவ்யதேசங் களுக்கும். அதில் ஸ்ரீரங்கத்திற்கு 247; திருப்பதிக்கு 202 பாசுரங்கள்! திருப்பாற்கடலுக்கு 51, பரமபதத் திற்கு 36 தான் என்றால் திருப்பதி, ஸ்ரீரங்க மகிமையை உணரவேண்டும்.
அதுபோல மகாராஷ்டிரர்களுக்கு உன்னத க்ஷேத்ரம் பண்டரிபுரம். இறைவன்- ரகுமாயி சமேத பாண்டு ரங்கன், பண்டரிநாதன். புண்டரீகன் எனும் பக்தன் தாய்- தந்தையரை வெகுவாக உபசரித்ததால், அவனைக் காண துவாரகாதீசன் ருக்மிணியுடன் வந்தார். அவரைக் கண்ட புண்ட ரீகன் செங்கல்லைப் போட்டு, "இதன் மீது நில்லுங்கள். தாய்- தந்தையரை உபசரித்துவிட்டு பின் வருகிறேன்' என்றான். மராட்டி யில் "விட்' என்றால் செங்கல்; ஆக அவன் "விட்டலன்'. அந்த புண்டரீகன் என்ன வேண்டி னான்? "எனது சமாதியை மிதித்து சாதுக்கள் உன்னை தரிசிக்க வேண்டும்' என்றான். இன்றும் பண்டரி க்ஷேத்ரத்தில் அவ்வாறே உள்ளது. அருகே பீமாநதி ஓடுகிறது.
ஆழ்வார்களின் துதிகள் பாசுரம்; நாயன்மார்களின் துதிகள் தேவாரம்; அருணகிரிநாதரின் பாடல்கள் திருப்புகழ் என்றால், பாண்டுரங்க பக்தர்கள் பாடல்களுக்கு "அபங்கம்' என்று பெயர்.
"ராமக்ருஷ்ணஹரி பாண்டுரங்கஹரி
விட்டல ரகுமாய் விடோபா ரகுமாய்
ஜெய்ஜெய் விட்டல ஜெயஹரி விட்டல
ஸ்ரீஹரி விட்டல நரஹரி விட்டல'
என்று எந்த வயதினரும், ஆண்- பெண் யாவரும், ஜால்ரா போட்டுக் கொண்டு பாடி ஆடுவார்கள். "நிவ்ருத்தி, ஞானதேவ், ஸோபான, முக்தாபாய், ஏகநாத், நாம்தேவ், துகாராம் என்று சாதுக்களின் நாமங்களைப் பாடுவார்கள்.
மகாராஷ்டிர சிவாஜி வம்சத்தினர் தஞ்சையை 400 வருடங்களுக்குமுன் ஆண்ட தால், சிவாஜியின் குரு சமர்த்த ராமதாசர் (அனுமத் அவதாரம்) வந்துள்ளதால் பாண்டு ரங்கன் கோவில்கள், அபங்கப்பாடல்கள் தமிழ்நாட்டிலும் முன்பே உண்டு.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு அருகிலேயே 1917-ல் கட்டப் பட்ட ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோவிலைக் காணலாம். இதனை நிர்மாணித்தவர் கோதண்டராம சுவாமிகள். பி.ஏ.பி.எல்., பட்டம் பெற்று உயர்நீதிமன்றத் தில் பணியாற்றியவர். பாண்டு ரங்க பக்தர். 2-11-1861-ல் நன்னில நாராயணபுரத்தில் பஞ்சாபகேசய்யர்- தர்மாம் பாளுக்குப் பிறந்தவர். ஆஷாட ஏகாதசி- கார்த்திகை ஏகாதசியன்று பண்டரிபுரம் செல்பவர். ஒருமுறை அங்குசெல்ல விடுமுறை கிடைக்காததால் வேலையை விட்டுவிட்டார். பண்டரி க்ஷேத்ரத்திலிருந்து கொண்டுவந்த பாண்டு ரங்கன்- ரகுமாயி விக்ரகத்தை வைத்து கோவில் கட்டினார்.
1915-ல் ஆரம்பித்து 1917-ல் கட்டி முடிக்கப்பட்டு கும்பா பிஷேகம் செய்யப்பட்டது. ஆக, நூற்றாண்டு கோவில் அது. அவர் 1934-ல் விட்டலன் திருவடி சேர்ந்தார். கோவிலில் நித்ய வழிபாடு கள், பஜனைகள் இன்றும் நடைபெறுகின்றன. சென்னைவாசிகள் தரிசித்து நெகிழவேண்டிய புண்ணிய தலம். சிறியதுதான்; ஆனால் மகிமை பெரியது. ஒரு இல்லறவாசி சந்நியாசம் ஏற்று, குருவின் ஆணைப்படி மீண்டும் இல்லறம் ஏகி, அதன்பின் நான்கு பிள்ளைகள் பிறந்தனர்.
அவர்களுள் ஒருவரே ஞானேஸ்வரர் எனப் படும் ஞானதேவர்.
ஞானதேவர் விஷ்ணு அம்சம் என்பர். மூவருடன் ஒரு பெண்ணும் உண்டு. அவர் களின் காலம்:
நிவ்ருத்தி: 1273- 1297- சிவாம்சம்.
ஞானதேவர்: 1275- 1296- விஷ்ணு அம்சம்.
ஸோபான தேவர்: 1277- 1296- பிரம்ம அம்சம்.
முக்தாபாய்: 1279-1297- பராசக்தி அம்சம்.
இவர்களது சரித்திரம்- இவர்கள் வாழ்ந்த காலத்திலிருந்த நாமதேவர் என்பவரால் (1270-1350) 246 அபங்கங்களில் எழுதப்பட்டது. எனவே நடந்தது உண்மையே.
விட்டல்பந்த் என்பவர் ஆன்மிகர்; படித்தவர்; பண்டரிபுர பாண்டுரங்க பக்தர். ஒருசமயம் த்ரயம்பகம், பிரம்மகிரி, பீமாசங்கர், பண்டரிபுரம் தலங்களை தரிசித்துவிட்டு ஆலந்தி வந்து இந்த்ரியானி நதியில் நீராடி சந்தியா கர்மாக்கள் செய்தார். அச்சமயம் சித்தோபந்த் என்ற மற்றொரு ஆன்மிகர் வந்தார்.
இருவரும் அறிமுகமாயி னர். விட்டல்பந்த், ""எனது
ஊர் கோதாவரிக்கரை யிலுள்ள அபேகாவ்;
அங்கு எனது பெற்றோர் கள் உள்ளனர். யான் ஆலந்தி தலம் தரிசிக்க வந்தேன்'' என்றார்.
அவரை சித்தோபந்த் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். இருவரும் உண்டனர்; பேசினர்; உறங்கினர்.
அன்றிரவு சித்தோபந்த் கனவில் தோன்றிய பாண்டுரங்கன், "உன் பெண் ருக்மிணியை விட்டல்பந்த்துக்கு மணம்செய்து கொடு' என்றான். விட்டல்பந்தும் அதுபோலவே கனவு கண்டார். ஜாதகம் பார்த்து மணம் நடந்தது. பண்டரிநாதனை தரிசித்து ஆலந்தி வந்தனர். விட்டல்பந்த் மேலும் தலங்களை தரிசிக்க விரும்பினார். "சரி; போய் சீக்கிரம் வரவும்' என்றார் சித்தோபந்த். ஸ்ரீசைலம், திருப்பதி, அருணாசலம், ராமேஸ்வரம், கோகர்ணம் முதலிய க்ஷேத்ரங் களை தரிசித்து வந்தார். பின்னர் தன் பெற்றோ ரைக் காண அபே காவ் சென்றார்.
ஆனால் அவர் கள் இறந்து விட்டிருந்தனர். எனவே மாமனார் ஆலந்தியிலேயே தங்கச்சொன்னார்.
விட்டல்பந்துக்கு தாம்பத்திய வாழ்க்கை யில் விருப்பமில்லை. சந்நியாசம் ஏற்க அனுமதி தருமாறு மனைவியிடம் கேட்டார்.
அவள் தன் தந்தையிடம் கூற, "குழந்தைகள் பெற்ற பிறகே' என்றார் அவர். ஏனோ சந்தான பாக்கியம் கிட்டவில்லை. விட்டல் பந்த் மனோநிலை சந்நியாசத்தில் இணைந்த தால், காசி சென்று ஒரு ஸ்வாமிகளிடம் சந்நியாசம் பெற்றார்.
இந்த விவரம் தெரியாமல் அவர் மனைவி ருக்மிணி அரசமரத்தை வணங்கி வந்தாள். அச்சமயம் காசிவாசி ஸ்ரீபாதஸ்வாமி என்பவர் க்ஷேத்ராடனமாக ஆலந்தி வந்தார்.
ருக்மிணி அவரை வணங்க, ""சந்தான பாக்கியம் பெற்று சுகமாய் இருப்பாய்'' என்று ஆசிர்வதித்தார்.
""அது சாத்தியமாகாது போலிருக்கிறது சுவாமி. யாத்திரை சென்றவர் இன்னும் வரவில்லை. சந்நியாசியாகிவிட்டாரோ என்னவோ...'' என்றழுதாள்.
""என் ஆசி வீண்போகாது'' என்றவர், அவர்களது குடும்ப விவரத்தை அறிந்து கொண்டு, ராமேஸ்வரம் செல்லும் எண்ணத் தைக் கைவிட்டு காசிக்குத் திரும்பினார்.
அங்கு தனது சீடன் சைதன்யாஸ்ரம் என்ப வனே ருக்மிணியின் கணவர் என உணர்ந் தார். ""நீ மணமானவன் என்று கூறவில் லையே. எனவே ஆலந்தி சென்று கிரகஸ் தாஸ்ரமம் கடைப்பிடி. பகவான் காப்பாற்று வான். கவலைப்படாதே'' என்றார்.
குரு ஆக்ஞை என்று ஆலந்தி வந்தார். ஊர் நாலும் பேசுமே. அதனால் ஊருக்கு வெளியிலேதான் குடியேறினார். முன்பு கூறியபடி நான்கு குழந்தைகள் பெற் றார். குழந்தை களுக்கு பூணூல் அணிவிக்கும் வயதுவர, வேத பண்டிதர்கள் அதற்கு அனு மதிக்கவில்லை. கூட்டம்கூடி, ""நீங்கள் செய்தது அதர்மம். இதற்கு தண்டனை மரணமே'' என்றனர். விட்டல்பந்தும் ருக்மிணியும் நீரில்மூழ்கி மரணமெய்தினர்.
பிறகு நிவ்ருத்தி பிராம்மணர்களிடம், ""எங்களுக்கு என்ன வழி?'' என வேண்ட, ""நான்கு வருணங்களில் எந்த வருணத்திலும் இருக்க உங்களுக்கு வழியில்லை. எனவே "பைதான்' சென்று, உயர்ந்த பிராம்மண சமூகத்திடம் அனுமதி வாங்கி வாருங்கள்'' என்றனர்.
""ஸோபனர், பாண்டவர்கள், துர்வாசர், வசிஷ்டர், அகத்தியர், கௌதமர், வால்மீகி எல்லாம் எந்த வருணத்தில் சேர்வர்?'' என்று கேட்டுவிட்டு, நால்வரும் பைதான் வந்து பிராம்மண சபையில் வேண்டினர். அவர்கள் சிரித்தனர். அப்போது ஞானதேவர், ""அதோ, அந்த எருமையிடம் எந்த ஆத்மா உளதோ, அதே ஆத்மாவே எங்கள் உடலிலும்'' என்றார்.
அதற்கு பிராம்மணர்கள், ""அப்படியாயின் அந்த எருமையை வேதம் கூற வை'' என்றனர். ஞானதேவர் பகவானை தியானித்து எருமையிடம் வேதம் கூறும்படிச்சொல்ல, அது வேதம் ஓதியது. பிராம்மண சபையினர் குழந்தைகளின் மகிமை உணர்ந்தனர். அனுமதி அளித்தனர். வேதம், உபநிடதம், கீதை, புராணங்கள், அபங்கங்கள் கற்றனர். ஹரிகதா காலட்சேபம் செய்தனர். நன்கு பஜனைகள் பாடினர்.
முதல் மகன் நிவ்ருத்தி (சிவ அவதாரம்) நாசிக் அருகேயுள்ள த்ரயம்பகேஸ்வரம் சென்று குகையில் தியானம் செய்து, கோரக்நாத் சித்தர் மரபில் வந்த கஹினாநாத்திடம் உபதேசம் பெற்றார். பின்னர் நிவ்ருத்தி ஞானதேவருக்கு தீட்சையளிக்க, ஞானதேவர் ஸோபான், முக்தா இருவருக்கும் தீட்சையளித்தார்.
இதன்பிறகு இவர்களிடையே குரு- சிஷ்ய பாவமே நிலைத்தது. அண்ணன், தம்பி, தங்கை பாசம் அறுந்தது. இதையே ஆன்மிக வம்சத்தொடர், பூர்வஜென்ம வாசனை என்பர். எல்லாருக்கும் கிடைக்காது.
மூன்று வருடங்கள் அவர்கள் இவ்வாறு ஆன்மிகத்தில் ஆழ்ந்து ஞான சிகாமணிகளாக விளங்கினர். தர்மம், ஞான வழிமுறைகள் நசிந்து வருவதைக் கண்ட விஷ்ணு அவதாரமான ஞானதேவர், குரு நிவ்ருத்தியிடம் அனுமதி பெற்று "நிவாஸா' எனும் இடம் வந்தார்.
கண்ணன் அருளிய பகவத்கீதை 700 சுலோகங்கள் கொண்டது. சமஸ்கிருத மொழியில் உள்ளது. அதை பாமரர்கள் அறியமுடியாதே என்றெண்ணிய ஞானேஸ்வரர், கீதையின் விளக்கத்தை "பாவார்த்த தீபிகா' அல்லது "ஞானேஸ்வரி' என்று மராட்டியில் மொழி பெயர்த்தார். 9033 "ஓவி' (வெண்பா, கலிப்பா என்பதுபோல பாடல் அளவு) கொண்டது. அதை மக்களிடையே பிரச்சாரம் செய்தார். அப்போது அவருக்கு பதினைந்து வயதுதான்.
(நிவாஸாவில் எந்தத் தூணில் சாய்ந்து உபதேசம் செய்தாரோ அந்த சிறிய தூணை மையமாகக்கொண்டே அங்கு ஒரு கோவில் எழுப்பப்பட்டுள்ளது.)
கிறிஸ்துவர்களுக்கு பைபிள், முகம்மதியர் களுக்கு குரான் என்றால் ஆன்மிக மகாராஷ் டிரர்களுக்கு "ஞானேஸ்வரி'யே! 700 வருடங் களுக்கு மேலும் மக்கள் அதன்மீது மதிப்பு, மரியாதை வைத்து, வாசித்து, மனத்தெளிவு பெறுகிறார்கள் என்றால் அதன் எளிமை, மகிமையை உணரவேண்டும்.
"ஞானேஸ்வர மாவுலி குருராஜ மாவுளி துக்கராம்' என்று நாமாவளி பாடி ஆடுவார்கள். "மாவுலி' என்றால் அன்னை. 21 வயதே வாழ்ந்த வரை "அன்னை' என்பார்கள் எனில் அவர்மீது, அவரது படைப்புகள்மீது மக்கள் வைத்திருந்த ஆழ்ந்த அன்பை சிந்திக்கவேண்டும்.
திருவல்லிக்கேணி பாண்டுரங்க பக்தர் கோதண்டராம சுவாமிகள். அவரது குரு மஹீபதி மஹராஜ் ஞானேஸ்வரியை தமிழில் மொழி பெயர்க்கச்சொல்ல அது பிரசுரமானது. காஞ்சி மகாபெரியவர் கூற அதனை மறுபதிப்பு செய்துள்ளனர்.
"ஞானேஸ்வரி' எழுதி போதித்த ஞானேஸ் வரர் மனது அமைதி அடையவில்லை.
""ஏன்?'' என நிவ்ருத்தி வினவ, ""கண்ணன் கூறியதன் விளக்கத்தைதான் "ஞானேஸ்வரி'யில் எழுதமுடியும். எனது அனுபவத்தை எழுத இயலாதே'' என்று சொல்ல, ""உனது அனு பவத்தை தனி நூலாகக் கூறலாமே'' என்றார்.
அதன்படி ஞானேஸ்வரர் எழுதியதே "அனு பவமாம்ருதம்' அல்லது "அம்ருதானுபவம்'.
807 "ஓவி' அளவுகொண்ட இந்த நூலுக்கு சின்மயானந்தரின் சிஷ்யர் ஸ்வாமி அனுபவானந்தர் 950 பக்கத்தில் விரிவுரை எழுதியுள்ளார் என்றால் அதன் ஆழம் உணரலாம்.
ஞானதேவரின் ஜீவசமாதி
கார்த்திகை மாதம், கிருஷ்ணபட்ச துவாதசி யில் (12-ஆம் நாள்) 26-10-1276 அன்று ஆலந்தியில் சித்தேஸ்வர்கோவில் அருகி லேயே 21-ஆவது வயதில் ஞானேஸ்வரர் ஜீவசமாதி அடைந்தார். சாங்கதேவர், ஸாவ தாமாயி, கோராகும்பர், விஸோபாகேசர், நாம தேவர், நிவ்ருத்தி, ஸோபானர், முக்தாபாய் என பலரது ஜீவசமாதி அங்குள்ளது.
ஞானதேவரின் ஜீவசமாதி வைபவத்தை 71 அபங்கங்களில் நாமதேவர் பாடியுள்ளார். இன்றும் சமாதிவிழாவில் இவை பாடப் படுகின்றன.
சமாதி அடைவதற்குமுன் ஞானதேவர் ஆழ்ந்து தியானம் செய்தார். நாமதேவரின் புதல்வர்கள் நரா, வித்த, கொண்டா, மஹதா ஆகியோர் சமாதியைத் தூய்மை செய்தனர்.
கங்கை நீர் தெளிக்கப்பட்டு, சந்தனம் பூசப் பட்டது. நிவ்ருத்தி சமாதி அறைக்கு கைப் பிடித்து அழைத்துச்சென்று அமர்த்தினார். ஞானதேவர் மூன்றுமுறை கைகளைக்கூப்பி வணக்கம் செலுத்தினார். கண்களை மூடினார்.
பிரம்மத்தில் ஐக்கியமானார். சமாதி இடம் கல்லால் மூடப்பட்டது. நிவ்ருத்தியால் மாலைகள், துளசி அணிவிக்கப்பட்டன.
300 வருடம் கழித்து ஏகநாதரின் கனவில் ஞானதேவர் கூற, அவர் சமாதியிடம் வந்து, செடிகொடிகளை அகற்றி, ஞானதேவரின் நெஞ்சை அழுத்தும் மரவேரை நீக்கினார்.
ஞானதேவரின் ஜீவசமாதி தினம் இவ்வருடம் 4-12-2018 அன்று அனுஷ் டிக்கப்படுகிறது.
மராட்டியர்களின் ஆன்மிகப் பொக்கிஷம் ஞானதேவரின் சமாதி; அவரது பொன் மொழிகள்!